×

சாதிச்சான்று இல்லாததால் சம்பந்தம் பேச முடியவில்லை காட்டுநாயக்க பழங்குடியின மக்கள் குமுறல்

திருச்சி, ஏப்.10:  சாதி சான்றிதழ் வழங்காததால் சம்மந்தம் பேச முடியவில்லை, குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே சாதிசான்றிதழ் வழங்க வேண்டுமென காட்டுநாயக்க பழங்கடியின மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அரங்கூரை சேர்ந்த இந்து காட்டு நாயக்கன் நலச்சங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தொட்டியம் தாலுகா அரங்கூரில் பழங்குடியின இந்து காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகள் தவறுதலாக எங்களை கம்மாள நாயக்கர், ராஜ கம்மாள நாயக்கர் என பல்வேறு இனங்களில் சேர்த்து சாதிச்சான்று வழங்கினர். உரிய விசாரணை நடத்தி பழங்குடியின இந்து காட்டு நாயக்கன் என சாதிச்சான்றிதழ் வழங்க கோரிக்கை விடுத்தோம். அதன்படி எங்கள் கிராமத்துக்கு விஏஓ, வருவாய் ஆய்வாளர், தாசில்தார், முசிறி ஆர்டிஓ ஆகியோர் நேரடியாக வந்து விசாரணை நடத்தி, எங்களின் உறவினர்களையும், ரத்த சம்பந்தம் உள்ளவர்களையும் விசாரித்தனர். 2 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. இதனால் எங்கள் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. மாவட்ட கலெக்டர் எங்களுக்கு பழங்குடியின இந்து காட்டு நாயக்கன் சாதிச் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்க தலைவர் வெங்கடேசன் கூறுகையில், ‘மலை காடுகளில் வசித்து வந்த எங்கள் இன மக்கள் வனப்பாதுகாப்பு சட்டத்தால் அங்கிருந்து விரட்டப்பட்டோம். நாடோடியாக வாழ்ந்த நாங்கள் குடுகுடுப்பை குறி சொல்வது, ஜோசியம் பார்ப்பது, வேட்டையாடுவது என பிழைப்பு நடத்தி வந்தோம். 30 ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகள் தவறுதலாக வேறு வேறுவேறு சாதியில் சேர்த்து எங்களுக்கு சாதிச்சான்று வழங்கினர். இதை மாற்றித்தர கோரிக்கை விடுத்து பல்வேறு பகுதிகளில் உரிய விசாரணை நடத்தி வழங்கப்பட்டது. சமீபத்தில் மணப்பாறை அருகே சமுத்திரத்தில் 200 பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. எங்கள் சாதியில் சான்று இல்லாததால் சம்பந்தம் பேச முடியவில்லை. எங்கள் உறவினர்களே எங்கள் பிள்ளைகளை திருமணம் செய்ய மறுக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பிலும் எங்களுக்குரிய முன்னுரிமை பறிபோகிறது. எனவே உரிய சாதிச்சான்று வழங்க வேண்டும்’ என்றார்.

Tags : tribes ,Adivasis ,
× RELATED பப்புவா நியூ கினியாவில்...